கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு பரவிய கொரோனா தொற்று...
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் அரியலூர், பெரம்பலூர் சென்ற 27 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு மொத்த காய்கனிச் சந்தை மிகப் பெரிய சந்தையாகும். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் இந்த மார்க்கெட் தினமும் மதியம் வரை செயல்பட்டு வந்தது.
இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24ம் தேதியன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, சென்னை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது. ஊரடங்கிற்குள் ஊரடங்கா என்று மக்கள் குழம்பினர். அடுத்த 4 நாட்களுக்கு பால் உள்பட எதுவும் கிடைக்காது என்று பீதியடைந்தனர். இதனால், 25ம் தேதி காலையில் மார்க்கெட்டுகளில் குவிந்தனர். பால், காய்கறி உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கினர்.
அன்று ஒரு நாளில் கோயம்பேடு சந்தையில் 50 ஆயிரம் மக்கள் குவிந்ததாக மறுநாள் தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு மார்க்கெட் கடைக்காரர்கள், தொழிலாளர்கள் என அந்த பகுதியில் இன்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து விட்டு சரக்கு வாகனங்களில் அரியலூர், பெரம்பலூர் சென்ற 27 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூரில் 2 சிறுவர்கள் முதல் 25 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும் கொரோனா பரவியுள்ளதாக தெரிகிறது.