அரியலூர், கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு..

அரியலூர், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.சென்னை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முதல்நாளான கடந்த 25ம் தேதி காலையில் மார்க்கெட்டுகளில் குவிந்தனர். பால், காய்கறி உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கினர். அன்று ஒரு நாளில் கோயம்பேடு சந்தையில் 50 ஆயிரம் மக்கள் குவிந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு மார்க்கெட் கடைக்காரர்கள், தொழிலாளர்கள் என அந்த பகுதியில் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து விட்டு சரக்கு வாகனங்களில் அரியலூர், பெரம்பலூர் சென்ற 27 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில், சென்னை கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 7 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்டக் கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதனால் நகரில் மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதே போல், திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அங்கும் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார். தஞ்சாவூரிலும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>