ஒரே ஒரு எழுத்தால் வந்தது பிரச்சனை - நடிகை கஸ்தூரி மீது வழக்கு

சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக கூறி நடிகை கஸ்தூரி மீது சமூக நீதி சட்டப்பேரவை இயக்கம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஆராயி மற்றும் அவரது மகள் தாக்கப்பட்டு, மகன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் சாதிய மோதலுடன் முதலில் தொடர்புபடுத்தப்பட்டது. பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அது சமூக விரோதிகள் நடத்திய தாக்குதல் என்றும் தெரிய வந்தது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாவிகளா கொன்னு புடிங்கினா மண்ணைத் தின்னவா முடியும், இந்த சம்பவங்களை பார்க்கும் போது பெண்ணாய் பதறுகிறேன், தாயாய் கதறுகிறேன், மண்ணுக்காக மனிதத்தை இழந்த சாதி வெறி நாய்களா'' என்று கடும் வார்த்தைகளால் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சாடி கருத்துக்களை பதிவு செய்திருந்தார். கஸ்தூரியின் இந்த கருத்து சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கிறது என்று நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக நீதி சட்டப்பேரவை இயக்கம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், “பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்து விடுங்கள்.. வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் Anniyar என்பதற்கு பதில் Vanniyar என்று எழுத்துப்பிழை காரணத்தால் அந்த கீச்சை நீக்குகிறேன். அந்த கீச்சை யாரும் SS எடுத்து தொடர்ந்து பகிரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>