மருத்துவமனைகள் மீது விமானங்கள் பூ தூவல்.. மோடியின் அடுத்த ஜிம்மிக்ஸ்..

கைதட்டுதல், விளக்கு ஏற்றுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் அடுத்த ஜிம்மிக்ஸ் இன்று அரங்கேறியது. நாடு முழுவதும் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்து, கொரோனா மருத்துவமனைகள் மீது மலர் தூவின.உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் நோய் இந்தியாவிலும் 40 ஆயிரம் பேருக்குப் பரவியிருக்கிறது. 1300 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் வீட்டு வாசலில் நின்று கைதட்டி, மணி அடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஒரு நாள் வேண்டுகோள் விடுத்தார்.

அதே போல், மக்கள் கைதட்டி, மணி அடித்தனர். மோடியின் தீவிர ஆதரவாளர்கள் எல்லை மீறி கூட்டமாகச் சென்று தெருக்களில் ஆட்டம், பாட்டத்துடன் மணி அடித்தனர். இதை ஏராளமானோர் கடுமையாக விமர்சித்தனர்.அடுத்த கட்டமாக, மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடுகளில் விளக்கேற்றி வைக்குமாறு ஒரு நாள் பிரதமர் அழைப்பு விடுத்தார். இதையும் மக்கள் செய்தனர். சிலர் தீப்பந்தங்களை ஏற்றியும், சிலர் வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் இதையும் விழாவாகக் கொண்டாடினர். வடசென்னையில் இதனால் ஒரு தீ விபத்து கூட நிகழ்ந்தது.

தற்போது மீண்டும் பிரதமர் மோடி இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்து சென்று மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு சல்யூட் அடித்து நன்றி காட்டின. அதே போல், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவின. பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்கள் இதையெல்லாம் அற்புதம், அற்புதம் என்று பாராட்டிக் கொண்டிருக்க எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஊரடங்கு மற்றும் ஊரடங்கு நீட்டிப்புகளால் கோடிக்கணக்கான மக்கள் பசியால் தவித்திருக்க இப்படி பாஜகவினர் ஆட்டம், பாட்டமுமாக கொரோனாவை கொண்டாடுகிறார்களே... வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு ஒரு ஐயாயிரமோ, பத்தாயிரமோ தராமல், பிரதமர் மோடி இப்படி ஜிம்மிக்ஸ் வேலைகளையே எப்போதும் செய்கிறாரே.. ராணுவம் இன்று பூச்சொரிதலுக்காகச் செலவழித்த பணத்தை சில சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவியாக அளித்திருந்தால் கூட சிலராவது மனம் மகிழ்ந்திருப்பார்கள் என்று விமர்சிக்கின்றனர்.

More News >>