பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பு.. நீண்ட வரிசையில் குடிமகன்கள்..
டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் இன்று(மே4) திறக்கப்பட்டன. குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைச் சிவப்பு மண்டலமாகவும், குறைவான பாதிப்புள்ள பகுதிகளை ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பில்லாத பகுதிகளைப் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு வகைப்படுத்தியது. இதில், ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதில் மதுக்கடைகளைத் திறக்கவும் அனுமதி வழங்கியது.
அதே சமயம், டெல்லி உள்பட சில மாநிலங்களில் சிவப்பு மண்டலங்களிலும் கொரோனா பாதித்தவர் உள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா உள்படப் பல மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.