தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று..
தமிழகத்தில் நேற்று(மே4) ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 266 பேருக்கு நோய் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நோய்ப் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. ஆனால், தமிழக அரசின் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்ற குழப்பமான அறிவிப்பின் காரணமாக, கடந்த ஏப்.25ம் தேதியன்று திடீரென சென்னை கோயம்பேடு சந்தையில் 50 ஆயிரம் பேர் குவிந்தனர். அதில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்ததோ தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து பல மாவட்டடங்களுக்கும் கொரோனா பரவி விட்டது.
தமிழகம் முழுவதும் நேற்று(மே4)தான் அதிகபட்சமாக 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாகப் பாதித்த 527 பேரில் 377ஆண்கள், 150 பெண்கள் ஆவர்.அதே சமயம், மாநிலத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 12,863 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 62,970 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 1724 ஆக அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்பதால், திருமண மண்டபங்கள், பள்ளிகளை மாநகராட்சி தன்வசம் எடுத்து, படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று கடலூரில் 122 பேருக்கும், திண்டுக்கல் 10, பெரம்பலூர் 25, தென்காசி9, திருவாரூர் 9, விழுப்புரம் 49, திருச்சி 4, ராணிப்பேட்டை 3, திருவாரூர், விருதுநகர் தலா 2 என்று கொரோனா பரவியிருக்கிறது.