சென்னை குடிமகன்களுக்கு டாஸ்மாக் சரக்கு கிடையாது.. கடை திறக்கப்படாது என அறிவிப்பு

சென்னை மாநகர் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை மறுநாள்(மே7) திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு கடந்த 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகம், ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கெல்லாம் 2 வது நாளாக இன்றும் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை நாளை மறுநாள்(மே7) முதல் திறக்கப் போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. எனினும், மதுபானக் கூடங்களை (பார்) திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் வரும் 7ம் தேதி திறக்கப்பட மாட்டாது. இந்த கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 25ம் தேதியன்று ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் குவிந்ததால்தான் கொரோனா தொற்று பலருக்கும் வேகமாக பரவியது. இந்த மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மூலம் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்தால் பெருங்கூட்டம் கூடும். சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கோயம்பேடு போல் டாஸ்மாக் கடைகளும் கொரோனா பரப்பும் மையமாகி விடும் என்று எடப்பாடி அரசின் முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், கமல், டி.டி.வி.தினகரன் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பு இல்லை என்று கூறியிருக்கிறது.

More News >>