கொரோனா பரப்பும் மையமான கோயம்பேடு மார்க்கெட் அடைப்பு..

சென்னையில் கொரோனா பரப்பும் மையமாக மாறி விட்ட கோயம்பேடு காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டது. தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாகச் சொன்னால், கடந்த 25ம் தேதிக்கு பிறகுதான் அதிகமானோருக்கு கொரோனா நோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரணம், தமிழக அரசின் குழப்பமான ஊரடங்கிற்குள் ஊரடங்கு அறிவிப்பால், கடந்த 25ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் 50 ஆயிரம் பேர் வரை குவிந்தனர். இதனால் கொரோனா பரவல் அதிகமாகும் என்று மறுநாளே பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

அது தற்போது உண்மையாகி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்குச் சென்ற வியாபாரிகள், பொது மக்கள் மூலம் கொரோனா பரவியது கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னையில் 52 பேர், அரியலூர் 22, கடலூர் 17, காஞ்சிபுரம் 7, விழுப்புரம் 20, திருவள்ளூர் 1 என்று கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இன்று கடலூர் மாவட்டத்தில் 68 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 25 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று விட்டு, சரக்கு வாகனங்களில் திரும்பியவர்கள் என்று தெரிய வந்தது.இந்த சூழலில், கடந்த வாரத்தில் கோயம்பேடு மார்க்கெட் தான் கொரோனா பரவலுக்கு முக்கியமான இடமாக இருந்திருக்கிறது என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு காய்கனி மார்க்கெட் இன்று மூடப்பட்டது. எனினும், காய்கறி, பழங்கள் அத்தியாவசியப் பொருட்கள் என்பதால், பழமார்க்கெட்டுக்கு மாதவரம் பகுதியிலும், காய்கறி மார்க்கெட்டுக்கு வேறொரு இடமும் என்று ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>