மார்க்ரம் போராட்ட சதம் வீண் - 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 56 ரன்களும், டேவிட் வார்னர் 51 ரன்களும் எடுத்தனர். தென் ஆஃபிரிக்கா தரப்பில் கேஷவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தென் ஆஃப்ரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியை தாங்கிப் பிடித்த டி வில்லியர்ஸ் மட்டும் 71 ரன்கள் எடுத்தார். ஏடன் மார்க்ரம் 32 ரன்களும், குவிண்டன் டி காக் 20 ரன்களும், ஃபாப் டு பிளஸ்ஸி 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
பின்னர் 189 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 227 ரன்கள் எடுத்தது. கேமரூன் பேன்கிராஃப்ட் 53 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்களும், ஷேன் மார்ஷ் 33 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் போட்டிகளில் 10ஆயிரம் ரன்கள் கடந்து சாதனை படைத்தார்.
தென் ஆஃபிரிக்கா தரப்பில் கேஷவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி டீன் எல்கர் 9, ஹசிம் அம்லா 8, டி வில்லியர்ஸ் 0, ஃபாப் டு பிளஸ்ஸி 4 என அடுத்தடுத்து வெளியேற 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால், ஒருபுறம் தொடக்க வீரர் மார்க்ரம் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்தார். அவருடன் தியேனிஸ் டி பிரைன் இணைந்தார். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். பின்னர் தியேனிஸ் டி பிரைன் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
அதன் பிறகு மார்க்ரம் உடன் குவிண்டன் டி காக் இணைந்து அபாரமாக விளையாடினர். இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இதற்கிடையில், நெருக்கடிக்கு மத்தியிலும் மார்க்ரம் 171 பந்துகளில் சதம் விளாசினார். பின்னர் 143 ரன்களில் மார்க்ரம் வெளியேறினார். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 147 ரன்கள் குவித்தனர்.
அதன் பின்னர் மீண்டும் வீழ்ச்சி ஆரம்பமானது. பிளாந்தர் 6 ரன்னிலும், கேஷவ் மஹாராஜ், ரபாடா ஆகியோர் ரன் ஏதும் இல்லாமலும் வெளியேறினர். கடைசியாக குவிண்டன் டி காக் 83 ரன்களில் ஹஸில்வுட் பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் வெளியேற ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்கா அணி 298 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்களுக்கு வழங்கப்பட்டது.