ஜூனிலும் ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் விநியோகம்.. முதல்வர் அறிவிப்பு..
அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜூன் மாதமும் இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:சென்னை மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்வதற்காக, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிக மக்கள் இருப்பதால்தான், கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது. பொதுக் கழிவறைகளை அதிகமானோர் பயன்படுத்துவதாலும் தொற்று எளிதாகப் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு, சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு நடமாடும் பரிசோதனை வாகனம் அவர்கள் வசிக்கிற இடங்களுக்கே செல்கிறது. அவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உரியச் சிகிச்சை அளிக்கப்படும்.சென்னையில் இதுவரை 1,724 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 267. இறந்தவர்கள் 19 பேர். அரசு சரியாக நடவடிக்கை எடுத்ததால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 4 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்திக்காக ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.தினமும் 12 ஆயிரம் பேரைப் பரிசோதனை செய்கிறோம். இப்படி அதிகமானோருக்குப் பரிசோதனை செய்யப்படுவதால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் தரப்பட்டுள்ளன. சுமார் 36 லட்சம் பேருக்குக் கருணைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவை இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த மாதமும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பணிபுரிய விருப்பமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கலாம். அவர்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அதிகாரிகள் சென்று விவரங்களைச் சேகரித்து, அவர்கள் சொந்த ஊர் செல்ல தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் சுமார் 50 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எந்தெந்த மாநிலத்துக்கு, எந்த தேதியில் ரயில்கள் இயக்கப்படும், எந்தெந்த தேதிகளில் அவர்களை அழைத்துச் செல்லவிருக்கிறோம் என்ற விவரங்களைத் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒரு வாரத்துக்குள் அவரவர் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.