பிடித்தம் செய்த தொகையைக் கட்டாமல் 3,200 கோடி ரூபாய் மோசடி!

தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் டி.டி.எஸ். வரியை பிடித்தம் செய்த 447 நிறுவனங்கள் அதனை, வருமான வரித்துறையிடம் செலுத்தாமல் ரூ.3,200 கோடி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களிடம் நிறுவனங்கள் டி.டி.எஸ். வரியை சம்பளம் அல்லது இதர பண சலுகைகள் அளிக்கும் போது பிடித்தம் செய்து வருமான வரித்துறையிடம் செலுத்துவது வழக்கம்.

இதனைக் கண்காணிக்க, வருமான வரித்துறையில் டி.டி.எஸ். பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு சமீபத்தில் நடத்திய ஆய்வில், 3,200 கோடி ரூபாயை 447 நிறுவனங்கள் செலுத்தாமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடியில் கட்டுமான தொழில் நிறுவனங்கள் பல, சினிமா தொடர்புடைய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளதாகவும், இந்த மோசடி, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலத்திற்கு உட்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வரி பணத்தை வசூலிக்கும் பணியிலும், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியிலும் வருமான வரித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>