ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு அரசியலுக்கு வரவில்லையா? - ரஜினிகாந்த்
ஜெயலலிதா இருந்தபோதே நான் அரசியலுக்காக குரல் கொடுத்தேன். அப்போதே பயம் இல்லாத போது, இப்போது எப்படி பயம் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று திங்கள்கிழமை [05-03-18] அன்று சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்தார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “அரசியலுக்கு வரும் என்னை திட்டுகின்றனர். கேலி செய்கின்றனர். இனி திட்டுகிற அரசியல் வேண்டாம். அதைக் கைவிட்டு விடுவோம். அரசியல் பாதை எனக்கும் தெரியும்; இது பூ, முள், பாம்புகள் இருக்கும் பாதைதான். அதையெல்லாம் தாண்டி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு இனி யாரும் வரக்கூடாது என நினைக்கின்றனர். நாங்கள் கரை வேட்டியை விட்டு விட்டு சினிமா துறைக்கு வராத நிலையில், சினிமாத் துறையில் இருப்பவர்கள் மட்டும் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்கின்றனர்.
நான் என் வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருந்தேன். ஒரு நடிகனாக சரியாக பணி செய்து கொண்டிருந்தேன். ஆனால், நீங்கள் உங்கள் வேலையைச் சரியாக செய்யவில்லை. 1996-இல் இருந்தே என்மீது அரசியல் பார்வை விழுந்துவிட்டது. அப்போதிருந்தே, அரசியலை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஜெயலலிதா இருக்கும்போது ஏன் அரசியலுக்கு வரவில்லை. அப்போது வராததற்கு பயம் காரணமா என்றும் கேட்கின்றனர். ஜெயலலிதா இருந்தபோதே நான் அரசியலுக்காக குரல் கொடுத்தேன். அப்போதே பயம் இல்லாத போது, இப்போது எப்படி பயம் இருக்கும்?
இப்போது தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான வெற்றிடம் உள்ளது. இந்தியாவிலேயே கட்சியைக் கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா. அதுபோல 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோதும், கட்சியைத் திறம்பட வழிநடத்திய திமுக தலைவர் கருணாநிதி, இப்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்.
எனவே, தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைவன் தேவை. அந்த வெற்றிடத்தை நிரப்பவே, நான் வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.