தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்ற ஏராளமான தொழிலாளர்கள் மூலம் பல மாவட்டங்களில் கொரோனா நிறையப் பேருக்குப் பரவியிருக்கிறது.

தமிழக அரசு நேற்று(மே6) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று மட்டும் புதிதாக 771 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 575 பேர் ஆண்கள், 196 பேர் பெண்கள். தற்போது மாநிலம் முழுவதும் 4,829பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1516 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 2 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி 35 ஆக உயர்ந்தது.

நேற்று 13,281 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 78,472 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 2327 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, அரியலூர் 222, செங்கல்பட்டு 145, கோவை 146, கடலூர் 324, தர்மபுரி2, திண்டுக்கல் 107, ஈரோடு 70, கள்ளக்குறிச்சி 53, நாகை 45, காஞ்சிபுரம் 87, கன்னியாகுமரி 17, கரூர் 45, மதுரை 111, கிருஷ்ணகிரி 4, நாமக்கல் 76, நீலகிரி 13, பெரம்பலூர் 40, புதுக்கோட்டை 3, ராமநாதபுரம் 21, ராணிப்பேட்டை 43, சேலம் 35, சிவகங்கை 12, தென்காசி 51, தஞ்சாவூர் 63, தேனி 51, திருப்பத்தூர் 20, திருவள்ளூர் 124, திருவண்ணாமலை 42, விழுப்புரம் 164, வேலூர் 28, திருச்சி 57 மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

More News >>