இந்தியாவில் 52,952 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 1783 ஆக அதிகரிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 52,952 ஆக உயர்ந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 1783 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தினம் தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவிவருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே7) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 52,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில்15,266 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 1783 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3561பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 89 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இம்மாநிலத்தில் இது வரை 16,758 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நேற்று மட்டும் கொரோனா பாதித்த 34 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 651 ஆக உயர்ந்திருக்கிறது. குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இம்மாநிலத்தில் 6,625 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் நேற்று மட்டும் 28 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 396 ஆக அதிகரித்திருக்கிறது.டெல்லியில் நேற்று மட்டும் 428 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிய வந்தது. இதனால், இம்மாநிலத்தில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5532 ஆக அதிகரித்தது.தமிழகத்தில் 4829 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இங்கு இது வரை 35 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>