டாஸ்மாக் மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் குடிமகன்கள்.. ஒருவருக்கு ஒரு புல் மட்டுமே..

சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.நாடு முழுவதும் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மே 3ம் தேதி வரையும், பின்பு மேலும் 2 வாரங்களுக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைச் சிவப்பு மண்டலமாகவும், குறைவான பாதிப்புள்ள பகுதிகளை ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பில்லாத பகுதிகளைப் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு வகைப்படுத்தியது. இதில், ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதில் மதுக்கடைகளைத் திறக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து பலரும் அம்மாநிலத்திற்கு மது வாங்கச் செல்வதால், வேறு வழியில்லை என்று கூறி தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டது. எனினும், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை பெருநகரைத் தவிர மற்ற மாவட்டங்களில் மட்டும் கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டது.இதன்படி, சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

ஒவ்வொரு கடை வாயிலிலும் நீண்ட தூரத்திற்குத் தடுப்புக் கட்டைகள் அமைத்து, ஒரு அடிக்கு ஒருவர் வீதம் வரிசையில் நிறுத்தப்பட்டனர். அனைவருக்கும் டோக்கன் கொடுத்து மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு புல் அல்லது 2 ஆப் அல்லது 4 குவார்ட்டர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சில மாவட்டங்களில் ஆதார் அட்டையைக் காட்டச் சொல்கின்றனர். சில இடங்களில் எதுவும் கேட்காமல் வரிசையில் வருபவர்களுக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.

More News >>