மும்பை, டெல்லியை போல் சென்னையிலும் வேகமாக பரவுகிறது கொரோனா..
மும்பை, டெல்லி, அகமதாபாத்தைத் தொடர்ந்து சென்னையும் கொரோனா பரவும் கேந்திரமாக மாறி வருகிறது. சென்னையில் இது வரை 2644 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகச் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(மே 7) மட்டும் 580 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5409 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து 1547 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 14.195 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 2436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 316 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவார்கள்.
சென்னையைத் தவிர, கடலூரில் 32 பேருக்கும், பெரம்பலூரில் 33, திருவள்ளூர் 63, விழுப்புரம் 45, திருவண்ணாமலை 17, செங்கல்பட்டு 13, அரியலூர் 24 பேர் என்று நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் கடந்த மாதம் 25ம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மும்பையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கும், டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.