ரம்யா நம்பீசன் பாடிய வைரமுத்து பாட்டு.. ஊரடங்கில் அருவா சண்ட பாடல் ரிலீஸ்.

தமிழில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான "சிலந்தி", ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் "அருவா சண்ட". கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கவுரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும்.இந்த படத்தில் ராஜா, மாளவிகா மேனன் ஜோடியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு இயக்குனர் மாரிமுத்து, காதல் சுகுமார் வெங்கடேஷ், சுஜாதா நடித்திருக்கின்றனர். கபடி போட்டிகள் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "சிட்டு சிட்டுக் குருவி ,வாலாட்டுதே...தொட்டுத் தொட்டு இழுத்துத் தாலாட்டுதே..."என்ற இளமை துள்ளும் பாடலை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கொஞ்சும் குரலில் பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார்." பய் பய் பய்...கலாச்சி பய்... பாடல் அளவுக்கு நான் பாடிய இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாடல் பதிவின்போது நம்பிக்கையுடன் கூறினார் ரம்யா நம்பீசன். இந்த பாடலுக்கு ராதிகா நடனம் அமைத்திருக்கிறார். கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் டிரெண்ட் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சுமார் 50 நாட்களாக இந்தியத் திரையுலகமே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்குவதற்கு தமிழ்த் திரைப்படத் துறையினர் அமைச்சரைச் சந்தித்து அனுமதி கேட்டு வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடக்கத்தையும் தயக்கத்தையும் கொரோனா அச்சத்தையும் உடைக்கும் முதல் நிகழ்ச்சியாக "அருவா சண்ட" படத்தின் பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பு வி.ஜே.சாபு ஜோசப். சண்டைக்காட்சி தளபதி தினேஷ். சுரேஷ் கல்லூரி கலை.நடனக் காட்சிகளை தீனா மற்றும் ராதிகா அமைத்துள்ளனர். ஒயிட் ஸ்க்ரீன் புரொடக்‌ஷன் சார்பில் வி. ராஜா பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் "அருவா சண்ட" தணிக்கை செய்யப்பட்டு அனைவரும் பார்க்கும் வகையில் யூ சான்றிதழ் பெறப் பட்டிருக்கிறது.தணிக்கை அதிகாரியின் பாராட்டுக்களைப் பெற்ற இந்த படம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது.

More News >>