முதல் நாளில் ரூ.170 கோடி.. டாஸ்மாக் மதுபான விற்பனை.. சென்னையில் குடிமகன்கள் அவதி..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருந்தால் ரூ.250 கோடியைத் தொட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசு கடந்த 4ம் தேதி இந்த ஊரடங்கை நீட்டித்த போதிலும், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகம், ஆந்திரா உள்படப் பல மாநிலங்களில் கடந்த வாரம் முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. சென்னையில் 2600க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருப்பதால், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 43 நாட்களாக மதுபானங்கள் கிடைக்காமல் ஏங்கிக் கிடந்த குடிமகன்கள் நேற்று அதிகாலையிலேயே டாஸ்மாக் வாசலில் தவம் கிடந்தனர். இதனால், அலைமோதிய கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல இடங்களில் சமூக இடைவெளியே பின்பற்றப்படவில்லை. சென்னையைச் சேர்ந்தவர்கள் பலரும் ஒரு நாள் முன்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முகாமிட்டு, டாஸ்மாக் கடை திறந்தவுடன் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, நேற்றிரவில் சென்னைக்கு வாகனங்களில் திரும்பிச் சென்றனர். பகலில் போலீசார் வாகனங்களைச் சோதனையிட்டதாலும், சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியே செல்ல விடாமல் தடுத்ததாலும் சென்னை குடிமகன்கள் பலர் அவதிப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை மண்டலத்தில் ரூ.34 கோடி, திருச்சி ரூ.32 கோடி, சேலம் ரூ.33 கோடி, கோவை ரூ.34 கோடி, நெல்லை ரூ.32 என்ற அளவில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. சென்னையில் கடைகள் திறக்கப்பட்டிருந்தால், மதுபான விற்பனை ரூ.250 கோடியை எட்டியிருக்கும் என்றும் கூறப்பட்டது.

அதேசமயம், டாஸ்மாக் மண்டல மேலாளர் ஒருவர் கூறுகையில், மதுபானக் கடைகள் மூடப்பட்ட பின்பு கடைகளின் பூட்டுச்சாவி அந்தந்த கடை மேற்பார்வையாளரிடம்தான் இருந்தது. இதனால், பல இடங்களில் நள்ளிரவில் அவர்களே பாட்டில்களைத் திருடி விற்றுள்ளனர். இப்போது அந்த கணக்கை எல்லாம் முதல் விற்பனையில் சேர்த்து விட்டார்கள் என்று தெரிவித்தார்.

More News >>