பாஜக ஆட்சிக்கு வந்ததுமே ஆரம்பித்தது ஆட்டத்தை!
திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் சோவியத் அதிபரும், ரஷ்ய புரட்சியாளருமான லெனின் சிலையை, பாஜகவினர் அகற்றியுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
எளிமைக்கு பெயர் பெற்ற மாணிக் சர்க்கார், 1998ஆம் ஆண்டு முதல், 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்று முதல்வரானார். தொடர்ந்து நான்கு முறையாக மாணிக் சர்க்கார் முதல்வராகப் பதவி வகித்தார்.
இந்நிலையில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணப்பட்டது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், அங்கு வாக்குகள் எண்ணப்படவில்லை. இதில் 35 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான பூர்வகுடி மக்கள் கட்சி 8 இடங்களை கைப்பற்றியுள்ளது.
மொத்தம் 43 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 16 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வென்றது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ளது.