தமிழகத்தில் ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 6 ஆயிரம் தாண்டியது..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழகத்தில் தினமும் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(மே 8) மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மாலை அளித்த பேட்டியில் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 405 பேர் ஆண்கள். 195 பேர் பெண்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 58 பேரையும் சேர்த்து 1605 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் இன்று 13,980 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 16,416 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களுக்குச் சிறப்பு மருந்து பெட்டி வழங்கி வருகிறோம்.இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் புதிதாக 399 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 26 பேர், கடலூர் 34, திருவள்ளூர் 75, விழுப்புரம் 21, நெல்லை 4, திருவண்ணாமலை 11, தர்மபுரி, திருச்சி தலா 2, ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், திருச்சி தலா ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் கடந்த மாதம் 25ம் தேதிக்கு பிறகு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் 399 பேருக்கும், திருவள்ளூரில் 75 பேருக்கும் கொரோனா பாதிப்புக்கு கோயம்பேடு பரவல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

More News >>