தமிழகத்தில் 2 நாளில் ரூ.294 கோடி மது விற்பனை.. மீண்டும் கடைகள் மூடல்..

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இரண்டே நாளில் ரூ.294 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன.

தமிழகத்தில் கொரோனா அதிகமாகப் பாதித்துள்ள சென்னை பெருநகரைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் ரூ.172 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.35 கோடி வரை மதுபானங்கள் விற்கப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று ரூ.122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. அதிகபட்சமாக மதுரை ரூ.32.4 கோடிக்கு மது விற்பனையானது. அடுத்து திருச்சி மண்டலத்தில் ரூ.31.17 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.29 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.20 கோடிக்கும் மது விற்பனையானது. சென்னை மண்டலத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் மொத்தம் ரூ.9 கோடி 20 லட்சத்திற்கு மது விற்பனையானது.

இதற்கிடையே, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது விற்பனையின் போது ஏராளமான மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனால், மதுக்கடைகளை மூடுவதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, டாஸ்மாக் கடைகள் மீண்டும் மூடப்பட்டன.

More News >>