டெஸ்ட் இல்லாமல் ரிப்போர்ட் தரச் சொன்ன டீன் மாற்றம்..

பயிற்சி மருத்துவர்களுக்குப் பரிசோதனை செய்யாமலேயே நெகட்டிவ் என ரிப்போர்ட் கொடுக்கச் சொன்ன அரசு மருத்துவக் கல்லூரி டீன் அதிரடியாக மாற்றப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகமான பரிசோதனைகள் செய்து வருவதால், பாதிப்பும் அதிகமாகத் தெரிய வருகிறது என்றும், கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக அளவில் இருப்பு உள்ளது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ உலா வந்தது. அதில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் திருவாசக மணி காரில் உட்கார்ந்து கொண்டு ஒரு பயிற்சி மருத்துவ மாணவரிடம் பேசுகிறார். அப்போது கொரோனா வார்டு பணியை முடித்துச் செல்லும் பயிற்சி மாணவர்களுக்கு இன்னும் டெஸ்ட் எடுக்கவில்லை என்று டீனிடம் அந்த மாணவர் கூறுகிறார். அதற்கு டீன் திருவாசக மணி, கொரோனோ டெஸ்ட் கருவிகள் இல்லை. அதனாலே எல்லோருக்கும் நெகட்டிவ் என்று ரிப்போர்ட் கொடுத்து அனுப்பி விடுங்கள் என்று பதில் சொல்லுகிறார். இந்த வீடியோவுடன் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பல கமெண்ட்ஸ் வந்தன.

இதையடுத்து, டீன் திருவாசக மணி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீனாக ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார்.

More News >>