பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கிம்hellip கொரியாவில் அமைதி திரும்புமா?

கடந்த  ஓர் ஆண்டுக்கும் மேலாக, வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனையால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவந்தது. இதனால், வடகொரியா - தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் இருந்துவந்தது.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதனால், இரு நாட்டு நட்புறவில் புதிய அத்தியாயம் எழுதப்படப் போவதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு, கொரிய தீப கற்பத்தில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டும் என்பது நோக்கம். ஆனால், அவர் இந்த பேச்சுவார்த்தைக்குச் செல்லவில்லை. அவர் சார்பில் தென் கொரிய அரசு அதிகாரிகள் 10 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இந்த கலந்துரையாடல் நன்றாக செல்லும் பட்சத்தில், அதிபர் மூன் வட கொரிய அதிபர் கிம்மைக் கண்டிப்பாக நேரில் வந்து சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் யாரும் எதிர்பாராத விதமாக, கிம் ஜோங் உன் கலந்து கொண்டது பலரை ஆச்சரியப்படுத்தியது. கிம்மைப் பொறுத்தவரை இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், விரிசல் விழுந்த கொரிய உறவை புதுப்பிக்கும் எண்ணம் இருந்தாலும், தென் கொரியா- அமெரிக்கா நட்புறவுக்கு முடக்குப் போட வேண்டும் என்ற சிந்தனையும் இருப்பதாகத் தெரிகிறது.

இப்படி பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் இன்று வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் இரு நாட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், தென் கொரியா முன்மொழிந்த பல யோசனைகளுக்கு வட கொரியா செவி மடுத்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து வட கொரிய தரப்பு, `மிகவும் தர்க்கமான, பிணைப்பான பேச்சுவார்த்தையில் வட கொரியா என்றும் நம்பிக்கைக் கொண்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். அது உலக அளவில் கொரிய நாடுகளை தலை நிமிரச் செய்யும்’ என்று கூறப்பட்டுள்ளது. நாளையும் பேச்சுவார்த்தை தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>