திருவள்ளூரில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு.. கோயம்பேட்டிலிருந்து பரவியது..

திருவள்ளூர் மாவட்டத்தில் 200 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாகவும், கோயம்பேடு மார்க்கெட் மூலம் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தில் தினமும் சுமார் 400 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 25ம் தேதிக்கு பிறகுதான் அதிகமான நோய்ப் பரவல் காணப்படுகிறது. காரணம், தமிழக அரசின் குழப்பமான ஊரடங்கிற்குள் ஊரடங்கு அறிவிப்பால், கடந்த 25ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் 50 ஆயிரம் பேர் வரை குவிந்தனர். இதே போல், சென்னையில் திருவான்மியூர் உள்படப் பல சந்தைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாகக் கூடியிருந்தனர். இதனால் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்று மறுநாளே பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

அது உண்மையாகி விட்டது. தமிழகத்தில் நேற்று வரை 6535 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 3330 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட்டில் தான் அதிகமானோருக்குப் பரவியிருப்பது தெரிய வந்தது. அதே போல், கோயம்பேட்டிலிருந்து சரக்கு வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்குச் சென்ற வியாபாரிகள், பொது மக்கள் மூலம் கொரோனா பரவியது கண்டறியப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பரவியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல், சென்னையில் 40 பேருக்கு கோயம்பேடு மூலம் கொரோனா பரவியிருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

More News >>