சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா.. தமிழக பாதிப்பு 7204 ஆனது..

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.டெல்லியில் நடைபெற்ற தப்லிகித் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மூலமாக தமிழகத்தில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது. அதன்பிறகு அந்த மாநாட்டிற்கு சென்றவர்கள், அவர்களுடைய உறவினர்கள் என அனைவரையும் வரவழைத்து பரிசோதனை செய்த பின்பு கொரோனா பரவல் தடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு கொரோனா பரவியது. தற்போது வரை கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 412 பேர் ஆண்கள். 257 பேர் பெண்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 135 பேரையும் சேர்த்து 1959 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 12,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்தால் 2 லட்சத்து 32,368பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று வரை கொரோனா பாதித்த 47 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 28 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மற்ற மாவட்டங்களில் ஓரிருவர் என்று 19 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் நேற்று இது வரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 3839 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 43 பேர், அரியலூர் 4, காஞ்சி 8, கிருஷ்ணகிரி 10, மதுரை 4, ராணிப்பேட்டை 6, திருவள்ளூர் 47, தூத்துக்குடி 10, விழுப்புரம் 6, வேலூர் 3, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் மூலம்தான் அரியலூர், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தற்போது அதிகபட்சமாக, சென்னையில் 3839, கடலூர் மாவட்டத்தில் 395, திருவள்ளூரில் 337, விழுப்புரத்தில் 299, அரியலூரில் 275, செங்கல்பட்டில் 267 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.

More News >>