காஷ்மீரில் 4ஜி சேவை.. அதிகாரிகள் குழு ஆராய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் 4ஜி மொபைல் இணையதள சேவை அளிப்பது குறித்து ஆராய உள்துறை அமைச்சகச் செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதனால், மக்களிடம் எதிர்ப்பு கிளம்பி வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்படப் பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், கடந்த ஆக.5ம் தேதி முதல் இணையதள, மொபைல் மற்றும் தொலைப்பேசி சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. காஷ்மிரீல் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை விலக்கக் கோரி காஷ்மீர் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, அங்கு படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உறுதி அளித்தது. எனினும், இது வரை அங்கு 2ஜி மொபைல் சேவை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சுகாதாரச் சேவை, கல்வி மற்றும் வர்த்தகச் சேவைகளுக்கு 4ஜி மொபைல், இன்டர்நெட் சேவை தேவை என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது. அதே சமயம், 4ஜி சேவை அளித்தால், பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படும் என்று மத்திய அரசு கூறியது.இருதரப்பு வாதங்களைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி மொபைல், இன்டர்நெட் சேவை அளிப்பது குறித்துப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு மத்திய உள்துறை செயலாளர், தகவல் ஒலிபரப்பு துறை செயலாளர் மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர், மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

More News >>