போட்டியின்றி எம்.எல்.சி. ஆகிறார் உத்தவ் தாக்கரே.. வேட்புமனு தாக்கல்..

மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாததால், எம்.எல்.ஏ.வாக இல்லை. முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராகவோ, சட்டமேலவை உறுப்பினராகவோ பொறுப்பேற்க வேண்டும்.

இதன்படி, மே 27ம் தேதிக்குள் முதல்வர் உத்தவ் தாக்கரே, எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி ஆகத் தேர்வாக வேண்டும். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை நியமித்து மாநில அமைச்சரவை முடிவு செய்தது. இதை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அனுப்பினர். ஆனால், கவர்னர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. மாறாக, பிரதமரிடம் பேசுங்கள் என்று உத்தவிடம் கூறியதாகத் தெரிகிறது. உடனே, பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் உத்தவ் தாக்கரே பேசினார். இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர சட்டமேலவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்குத் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம் அனுப்பினார். தேர்தல் ஆணையமும் அதை ஏற்று, சட்டமேலவை காலியிடங்களுக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்டமேலவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று சிவசேனா கட்சியினர் தெரிவித்தனர்.

More News >>