தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி..

தமிழகத்தில் கொரோனா பாதித்த 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகினர். இதனால், கொரோனா பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 500 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 92 பேரையும் சேர்த்து 2051 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 5895 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மட்டுமே 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளது பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் இருந்துள்ளது. அவர் நேற்று உயிரிழந்தார்.

இதே போல், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி மற்றும் 50 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் 65 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

கடலூரைச் சேர்ந்த 32 வயது பெண், ஆஸ்துமா சிகிச்சைக்காகக் கடந்த 6ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதித்து, உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவரும் நேற்று உயிரிழந்தார்.

தமிழகத்தில் பெரும்பாலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வேறு நோய்களால் அவதிப்படுபவர்களுக்குத்தான் கொரோனா பரவுகிறது. சென்னையில் நேற்று 538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 48 குழந்தைகளும் அடங்குவார்கள்.

More News >>