52 நாட்களுக்கு பிறகு திரைப்பட பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின.. கமல், சிவகார்த்திகேயன் படங்கள் ஜரூர்..

கொரோனா ஊரடங்கால் கடந்த 52 நாட்களாகத் தமிழ் திரையுலகம் முடங்கிய நிலையில் சுமார் 23 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. இதுதொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்த் திரைப் பட பணிகள் கடந்த 52 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு அல்லாத மற்ற பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளான முககவசம், கையுறை, கிருமி நாசினி மற்றும் சமூக இடைவெளி ஆகிய நிபந்தனைகளுடன் குரல் பதிவு, படத்தொகுப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் கமல் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தின் படத்தொகுப்புப் பணிகள் துவங்கியுள்ளது. மேலும் சரவணன் இயக்கும் ராங்கி படத்தின் எடிட்டிங் மற்றும் டிஐ, எம்எஸ் ஆனந்த் இயக்கும் சக்ரா படத்தின் எடிட்டிங்,சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் உள்ளிட்ட 15 படங்களின் எடிட்டிங் டப்பிங் கிராபிக்ஸ் நடைபெற்று வருவதுடன் மேலும் 8 படங்களின் தயாரிப்பு பணிகள் இன்று தொடங்கவிருக்கின்றன.

தயாரிப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பணிகளைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். யாராவது ஒருவர் விதிமுறையை பின்பற்றாவிட்டால் அல்லது தொற்று ஏற்பட நமது உறுப்பினர்கள் யாராவது ஒருவர் காரணமாக இருந்தாலும் நமக்கு அரசு அளித்துள்ள அனுமதி ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து அனைவரும் விதிமுறையைப் பின்பற்றிப் பணி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பணியின் தன்மை, பணிபுரியும் தொழிலாளர்கள் விவரம், பணியாளர்கள் பணி புரியும் இடம் ஆகிய விவரங்கள் அரசுக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் விவரம், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம், பணியின் தன்மை ஆகியவற்றை தங்களது சங்கங்கள் மூலம் சம்மேளனத்திற்கு அனுப்பிய பிறகு பணிகள் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழ் திரைப்படத்துறைக்குப் படப்பிடிப்பு அல்லாத பணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ் திரைப்படத்துறை சார்பாக இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

More News >>