ரூ.20 லட்சம் கோடி யாருக்கு? இன்று மாலை 4 மணிக்கு நிதியமைச்சர் அறிவிப்பார்..

பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் எந்தெந்த துறைக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதை இன்று(மே13) மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் அறிவிக்கவுள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முறை நீட்டிக்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. மே 17ம் தேதி முடிவடையும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்றிரவு அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றிரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி திட்டத்தையும் அறிவித்தார். ஆனால், அந்த திட்டத்தின் சாரம்சங்கள் குறித்து அவர் விளக்கவில்லை. அதை நிதியமைச்சகம் அறிவிக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டியளிக்க உள்ளார். இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி ஆத்மாநிர்பய் பாரத் அபியான் திட்டம் என்பது வெறும் நிதி வழங்கும் திட்டமல்ல. இது பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்ட திட்டம். நடைபாதை வியாபாரி, சிறுகுறு தொழில்களில் உள்ளவர்கள், வர்த்தகர்கள் என எல்லோரையும் பயன்படச் செய்யும் திட்டமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News >>