ரூ.200 கோடி பணிகளுக்கு சர்வதேச டெண்டர் கிடையாது.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

ரூ.200 கோடி வரையான அரசு பணிகளுக்குச் சர்வதேச டெண்டர் கோரப்படாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு நேற்று முன் தினம் இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டத்தையும் அறிவித்தார். இந்த திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது: ரெரா அமைப்பில் பதிவு செய்த ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள், கட்டுமானத் திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசம் 6 மாதம் நீட்டிக்கப்படும். சிறப்பாகச் செயல்படும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கப்படவுள்ளது.

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான(பி.எப்) சந்தாவில் தொழிலாளர் பங்குத் தொகையை அரசு செலுத்தும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பி.எப். சந்தா தொகையை அரசு செலுத்தும். ரூ.200 கோடிக்குக் குறைந்த அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள், இனி இந்திய நிறுவனங்களுக்கே வழங்கப்படும். சர்வதேச டெண்டர் விடப்படாது.மின் விநியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்காக ரூ.90 ஆயிரம் கோடி வரை கடனுதவி அளிக்கப்படும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும், வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கும் கடனுதவி அளிக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

More News >>