தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 288 பேர் ஆண்கள். 221 பேர் பெண்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 42 பேரையும் சேர்த்து 2176 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 12,666 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 68,250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் தினமும் சராசரியாக 500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5262 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 25 பேர், அரியலூர் 4, திருவள்ளூர் 25, திருவண்ணாமலை 23, நெல்லை 5, விழுப்புரம் 7, காஞ்சிபுரம் 4 மற்ற மாவட்டங்களில் 2, 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் மூலம்தான் அரியலூர், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.ஆரம்பத்தில் கொரோனா பாதித்துக் குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது குணம் அடைந்தவர்களின் விகிதத்தை விட புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகி வருகிறது. 9227 பேருக்கு நோய்த் தொற்று பாதித்த நிலையில், 2176 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். இன்னும் 7051 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>