கொரோனா ஊரடங்கு,, ஜூன் 30ம் தேதி வரை ரயில்கள் ஓடாது..

கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 78 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி முதன் முதலில் மார்ச் 24ம் தேதி, நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்தார். அதன்பிறகு 3 முறை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மே 17ம் தேதி முடியும் தருவாயில் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த 2 நாள் முன்பாக மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மாநிலங்களின் பரிந்துரைப்படி 4வது ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் இன்று(மே14) வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. முன்பதிவு செய்தவர்கள் அந்த கட்டணத் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில்கள் மட்டும் ஏற்கனவே அறிவித்தபடி இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜூன் 30ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால், ஊரடங்கு உத்தரவும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், ஏற்கனவே பெரும்பாலான தொழில்களுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>