தொழிலாளர்களுக்கு நிதியுதவி.. மத்திய அரசுக்கு முஸ்லிம்லீக் கோரிக்கை..

வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம்லீக் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சிறு குறு நடுத்தர தொழில்களுக்குப் பிணையற்ற கடன்கள், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யக் கடைசி தேதி நீட்டிப்பு, இபிஎப் என விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். தினமும் உழைக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. நிதியமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தையே அளிப்பதாக அமைந்துள்ளது.

பசியால் வாடி வரும் கோடிக்கணக்கான மக்களுக்கும், பல்வேறு மாநிலங்களிலிருந்து நடந்தே சொந்த ஊர்களுக்குத் திரும்பி வரும் தொழிலாளர்களுக்கும் சிறிதும் உதவும் வகையில் இந்த திட்டங்கள் இல்லை. அடித்தட்டு மக்களுக்குச் சென்று சேரும் வகையில் மத்திய அரசின் அறிவிப்புகள் வருங்காலங்களில் இருக்குமா என அச்சம் மக்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலைப் பாதுகாக்கக் கடனுதவிகளை அறிவித்துக் காப்பற்ற நினைக்கும் மத்திய அரசு, அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நாளை உயிரோடு இருந்தால்தான் நிறுவனங்கள் செயல்பட முடியும் என்பதை மறந்து விட்டது.

சிறு, குறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களை வரும் காலங்களில் கூட விற்பனை செய்து காத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், 50 நாட்களாக வேலையின்றி வருவாயின்றி சிக்கித் தவிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றி எந்த அறிவிப்பையும் மத்திய அரசு அறிவிக்காதது வேதனை அளிப்பதாக உள்ளது. தற்பொழுது வார்த்தைகளைச் சாப்பிட வைத்து அனைத்து தரப்பினரும் வயிற்றை நிரப்பி விடலாம் என மத்திய அரசு நினைத்துக் கொண்டுள்ளது. ஆகவே கார்ப்ரேட் நிறுவனங்களைக் காக்கும் செயலை விட்டு இந்தியாவைக் கட்டமைக்கும் அடித்தட்டு மக்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.

More News >>