கமல் படத்தில் ரஜினி நடிப்பாரா? திடீர் சந்தேகம் கிளப்பும் கோலிவுட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது, அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியிலும் லோகேஷ் ஈடுபட்டார். தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சிவா இயக்குகிறார். இப்படத்தை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட இருந்தனர். ஆனால் கொரோனா லாக் டவுனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

லாக் டவுன் முடிந்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் 2021ம் ஆண்டு பொங்கலுக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எனவே இதன் படப்பிடிப்பு முடிவதற்கு டிசம்பர் மாதம் ஆகிவிடும் என்று தெரிகிறது. அதன்பிறகு கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிப்பாரா என்ற சந்தேகத்தைக் கோலிவுட்டில் சிலர் கிளப்பி உள்ளனர்.

ரஜினி, கமல் இருவருமே அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி பிரசாரங்களில் கமல் ஈடுபட்டு வருகிறார். 2021 ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று ரஜினி காந்த் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஆனால் இதுவரை கட்சி தொடங்கவில்லை. ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கினால் படத்தில் நடிப்பதை நிறுத்தும் சூழல் உள்ளது. அதன்பிறகு அவர் கமல் படத்தில் நடிப்பதும் கனவாகவே முடியும் என்று கூறப்படுகிறது.ரஜினி கட்சி தொடங்காமல் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டினால் கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறதாம். ரஜினி கட்சி தொடங்குவதும் கமல் படத்தில் நடிப்பதும் மதில் மேல் பூனையாகவே இருக்கிறது.

More News >>