இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்... நெகிழும் பாத்திரக் கடைக்காரர்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சில தினங்களுக்கு முன்னர் பாத்திரக்கடை வைத்திருக்கும் கே.கே.சாமி என்பவரின் கடைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
கே.கே.சாமி என்கிற கே.கருப்பசாமி, புதுச்சேரியில் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் பாத்திரைக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாகச் சென்ற முதல்வர் நாராயணசாமி கே.கே.சாமியை பார்த்ததும் காரிலிருந்து இறங்கி பாத்திரைக் கடைக்கு வந்து அவரை நலம் விசாரித்துள்ளார். எதிர்பாராதவிதமான தனது கடைக்கு முதல்வர் வந்ததும் திக்குமுக்காடிவிட்டார் கே.கே.சாமி.
இது குறித்து கே.கே.சாமியிடம் பேசினோம், “நான் இங்கு பல ஆண்டுகளாக பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறேன். இதைத் தவிர, புதுச்சேரி ரயிவே பயணிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளேன். இதனால், ரயில் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியை பலமுறை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன்.
இந்நிலையில், புதுவை முதல்வர் நாராயணசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகக்கூடம் திறப்பு விழா கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, நான் எனது கடையில் இருந்ததை கவனித்திருக்கிறார்.
முதல்வரின் கார், என் கடைக்கு முன்பாக நின்றது. காலில் இருந்து இறங்கிய முதல்வர் நாராயணசாமி என் கடைக்குள் வந்து என்னை சந்தித்தார். இது அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எனக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சமூக அக்கறை கொண்டவனாக இருந்தாலும் நான் ஒரு சாதாரண மனிதன். கோரிக்கை வைக்க அடிக்கடி முதல்வர் அலுவலகத்திற்கு சென்றுள்ளேன் அவ்வளவுதான்.
முதல்வர் காரைவிட்டு இறங்கி வந்து என்னை சந்திக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால் அவர் அப்படி செய்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது. எளிய முதல்வர் எங்கள் புதுவை முதல்வர் நாராயணசாமி” என்றார் பெருமிதத்துடன்.