ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானிகளால் கொரோனா பரிசோதனைக்கு புதிய கருவிகள் கண்டுபிடிப்பு.. கெடிலா நிறுவனம் தயாரிக்கும்..

குறைந்த நேரத்தில் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உதவும் ஐ.ஜி.ஜி. எலிசா டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.வி. விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த கருவிகளை கெடிலா பார்மசூட்டிகல் கம்பெனி தயாரிக்கவுள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் இது வரை 81,970 பேருக்குப் பாதித்துள்ளது. தற்போது, அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆர்.டி-பி.சி.ஆர் கருவிகள் போதிய அளவில் கிடையாது. இதனால், ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்), சீனாவிலிருந்து பெறப்பட்டது. ஆனால், சீனக் கம்பெனிகளின் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சரியாகச் செயல்படவில்லை.

இந்நிலையில், குறைந்த நேரத்தில் அதிகமானோருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்று அறிய புதிய கருவிகளை வடிவமைக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தற்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்(ஐ.சி.எம்.ஆர்), தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்(என்.ஐ.வி) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், புதிதாக ஐ.ஜி.ஜி. எலிசா டெஸ்ட் கருவிகளை வடிவமைத்துள்ளனர்.

இந்த கருவிகளின் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 90 ரத்த, சளி மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும். இதனால், ஒரே நாளில் ஏராளமான பரிசோதனைகளைச் செய்ய முடியும். இந்த கருவிகளின் பரிசோதனைத் திறன் 98.7 சதவீதமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரேபிட் டெஸ்ட் கருவிகளை விடச் சிறப்பாகச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிகளவில் இந்த கருவிகளைத் தயாரிப்பதற்கான விருப்பம் கேட்டு, ஸ்பான், ஜே.மித்ரா, சிப்லா, ஜைடஸ் கெடிலா ஆகிய 4 மருந்துக் கம்பெனிகளுக்கு ஐ.சி.எம்.ஆர் அழைப்பு விடுத்தது. இதில் கெடிலா பார்மசூட்டிகல் கம்பெனி, புதிய கருவிகளைத் தயாரித்து வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதே போல், நியூ ஜென் உள்ளிட்ட வேறு கம்பெனிகளுக்கும் இதன் தயாரிப்பு உரிமையை ஐ.சி.எம்.ஆர். வழங்கவுள்ளது.

More News >>