ஜோதிகா படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் 29ம் தேதி ரிலீஸ்.. சூர்யா தயாரிக்கும் பொன்மகள் வந்தாள்..

நடிகர் சூர்யா ,ஜோதிகா இணைந்து தயாரிக்கும் படம் பொன்மகள் வந்தாள். ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கே.பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன்,, பாண்டியராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கி உள்ளார். கோர்ட் சம்பந்தப்பட்ட பின்னணியில் இதன் கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழில் முதன்முறையாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் படமாக இப்படம் அமைந்துள்ளது. வரும் 29ம் தேதி அமேசான் பிரைமில் இது வெளியாகவிருக்கிறது.முன்னதாக இப்படத்தை தியேட்டரில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் கோலிவுட் படம் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் படங்களும் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி படத்தின் கோ ப்ரட்டியூசர் மற்றும் 2டி நிறுவனத்தின் நிர்வாக செயல் இயக்குனர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் கூறும்போது,அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்திருப்பதில் பெருமை அடைகிறோம். இப்படம் ஒடிடி தளத்தில் ஒரு புதிய மைல் கல்லை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

200 நாடுகளில் இப்படம் ஒரே நேரத்தில் வெளியாகிறது. உலக அளவில் ரசிகர்களை முதன்முறையாக எதிர்கொள்வது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தைத் தவிர அமேசான் பிரைம் வீடியோ அமிதாப்பச்சன் நடித்துள்ள குல்லபோ சிதாபோ படம் உள்ளிட்ட 7 பெரிய படங்களை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>