உ.பி.யில் லாரிகள் மோதி புலம்பெயர்ந்த தொழிலாளர் 23 பேர் பலி, பலர் படுகாயம்..

உத்தரப்பிரதேசத்தில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பிற மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடவசதி இல்லாமல் தவித்தனர். பல நாட்களாகியும் பஸ், ரயில் போக்குவரத்து இல்லாததால், ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மேல் நடந்தே செல்கின்றனர். சரக்குலாரிகளிலும் மொத்தமாக ஏறிச் செல்கின்றனர். இதில் பலரும் விபத்துக்குள்ளாகி மரணம் அடைகின்றனர்.

ராஜஸ்தானிலிருந்து சரக்கு லாரியில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த லாரி, உத்தரப்பிரதேச மாநிலம் ஆரையா என்ற இடத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்குச் சென்ற போது இன்னொரு சரக்கு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 23 தொழிலாளர்கள் அதே இடத்தில் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தொழிலாளர்கள், பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு முன்பு, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் சரக்கு ரயில் ஏறி, பலியாயினர். அதே போல், மகாராஷ்டிராவிலிருந்து உ.பி.க்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் 8பேர் மத்தியப் பிரதேசம் குணா அருகே விபத்தில் சிக்கிப் பலியாயினர். முசாபர் நகர் அருகே நடந்த விபத்தில் 6 பேர் பலியாயினர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பும் போது இப்படிப் பலியாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

More News >>