புலம்பெயர் தொழிலாளர்கள் பயணத்தை தடுத்து நிறுத்துக.. மாநிலங்களுக்கு உள்துறை உத்தரவு..

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து தர வேண்டுமென்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடவசதி எதுவும் இல்லாமல் தவித்தனர். பல நாட்களாகியும் பஸ், ரயில் போக்குவரத்து வசதியும் இல்லாததால், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மேல் நடந்தே செல்கின்றனர். சரக்குலாரிகளிலும் மொத்தமாக ஏறிச் செல்கின்றனர். இதில் பல விபத்துகள் ஏற்பட்டு பலர் மரணம் அடைந்துள்ளனர்.

அவுரங்காபாத்தில் ரயில் ஏறி 16 பேர் பலி, உ.பி.யில் சரக்கு லாரிகள் மோதி 23 பேர் பலி, ம.பி.யில் பஸ்மோதி 6 பேர் பலி என்று தினமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சாவு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலை வழியாகவும், ரயில்வே தண்டவாளங்கள் வழியாகவும் பல நூறு கி.மீ. நடந்தே பயணம் செய்வதைத் தடுக்க வேண்டும். சமீபத்தில் நடந்த சம்பவங்கள் போல் நடக்காமல் இருக்க, அவர்களைத் தடுத்து நிறுத்தி உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும். மத்திய அரசு, ஸ்ராமிக் எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்து மட்டுமே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அஜய் பல்லா கூறியுள்ளார்.

More News >>