உத்தரப்பிரதேசத்தில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது...

உத்தரப்பிரதேசத்தில் பள்ளியிறுதித் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்களிலும் பள்ளியிறுதித் தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. சில மாநிலங்களில் தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இன்று பள்ளியிறுதித் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பிரயாக்ராஜ் நகரில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமிநாசினி தெளித்து, ஆசிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றி பணியைத் தொடங்கினர். கொரோனா தொற்று பரவாமல் இருக்க மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர். இது குறித்து, தேர்வு மைய அதிகாரி திரிபாதி கூறுகையில், சமூக இடைவெளி பின்பற்றி ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு விதித்துள்ள அனைத்து விதிகளையும் பின்பற்றி வருகிறோம் என்றார்.தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

More News >>