சோனியாஜிக்கு இருகரம் கூப்பிய நிர்மலா சீதாராமன்..

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடவசதி எதுவும் இல்லாமல் தவித்தனர். பல நாட்களாகியும் பஸ், ரயில் போக்குவரத்து வசதியும் இல்லாததால், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மேல் நடந்தே செல்கின்றனர். மேலும், சரக்கு லாரிகளிலும் செல்கின்றனர். இதில் பல விபத்துகள் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, இந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ரயில் டிக்கெட் கட்டணங்களைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார். அதன்படி, அரியானா மாநிலம் உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் பல லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த தொழிலாளர்களுக்காக 1000 பஸ்களை ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதினார்.

இப்போது இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரமான நிலைமை குறித்து மீடியாக்களிலும் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால், நாடு முழுவதும் மோடி அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் 4ம் கட்டமாக பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிக் கூறியதாவது:புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனையை நாம் ஒன்றுசேர்ந்துதான் தீர்க்க முடியும். இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இந்த பிரச்சனையைத் தீர்க்க மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். நான் சோனியாகாந்தியை கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

More News >>