நிதியமைச்சர் அறிவித்த ரூ.48,100 கோடி திட்டங்கள்..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே17), ரூ.48.100 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். வேலை உறுதி திட்டத்திற்குக் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி, இ-வித்யா கல்வித் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டத்தையும் அறிவித்தார். இந்த திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 3 நாட்களாக விளக்கம் அளித்து வந்தார்.

இந்நிலையில், 4ம் கட்டமாக இன்று காலையில் நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு உதவிகளை அளித்துள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து 3 மாதங்களுக்கான அரிசி, பருப்பு போன்றவை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. இதை மக்களிடம் சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்த்த இந்திய உணவுக்கழகம்(எப்.சி.ஐ) மற்றும் மாநில அரசுகளுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் 8 கோடி 19 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ளது. 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.10,025 வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் நிதிநெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.12,390 கோடி நிதி தரப்பட்டுள்ளது. மேலும், மத்திய வரி பங்கீட்டில் மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதத்திற்குரிய ரூ.46,038 கோடியும் தரப்பட்டு விட்டது. பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.11,902 கோடியும், சுகாதாரத் துறை சார்பில் ரூ.4113 கோடியும் மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ளது.மேலும், ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.61 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி வழங்கப்படும். பள்ளிகள் செயல்படாத நிலையில் ஆன்லைனில் கற்பிக்கும் இ-வித்யா கல்வித் திட்டம் தொடங்கப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்கனவே 3 தொலைக்காட்சி சேனல்களுடன் மேலும் 12 சேனல்கள் தொடங்கப்படும்.

மாநில அரசுகள் கடன் வாங்கும் அளவு, மாநில மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் என்பது 5 சதவீதமாக உயர்த்தப்படும். இதன்மூலம், மாநிலங்களுக்குக் கூடுதலாக 4.28 லட்சம் கோடி கடனுதவி கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்று அவர் மொத்தம் ரூ.48,100 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். கடந்த 4 நாட்களில் மொத்தம் ரூ.20 லட்சத்து 97,053 கோடிக்கான திட்டங்களை அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

More News >>