தமிழகத்தில் ஊரடங்கு மே31வரை நீட்டிப்பு.. 25 மாவட்டங்களில் தளர்வு..

தமிழகத்தில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் 25 மாவட்டங்களில் உள்ளூர் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே சமயம், 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசைப் பின்பற்றி, தமிழக அரசும் ஊரடங்கு நீட்டிப்பை நடைமுறைப்படுத்தியது. இதைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுச் சுகாதார வல்லுநர்கள் குழு மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

எனினும், கொரோனா அதிகம் பரவாத கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. இதன்படி, அந்தந்த மாவட்டத்திற்குள் போக்குவரத்து வாகனங்களுக்கு பாஸ் இல்லாமல் அனுமதி அளிக்கப்படும். எனினும், மக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிவட்டத்துக்குச் சென்று வர டி.என். இ-பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே நீடிக்கும்.

அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனுமதிக்கப்படுகிறது.தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் 100 சதவீத பணியாளர்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களைத் திருத்தும் பணி நடைபெற அனுமதி அளிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்குத் தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்காகச் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடமும், சென்னையில் மாநகர கமிஷனரிடமும் அனுமதி பெற வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் செயல்படாது. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையும் நீடிக்கும்.பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், மதுக்கூடங்கள் (பார்), உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவற்றுக்கான தடையும் நீடிக்கும்.

சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவும் தடை நீடிக்கும்.விமானம், ரயில், பஸ் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கான தடையும் நீடிக்கும்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடு நடைமுறைகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை. நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிரப் பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>