தமிழகத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கிய அரசு அலுவலகங்கள்.. 50 சதவீத ஊழியர்கள் வருகை..

தலைமைச் செயலகம் உள்படத் தமிழக அரசு அலுவலகங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கின. அரசு அறிவிப்பின்படி, 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை, திருவள்ளூர் உள்பட 12 மாவட்டங்களைத் தவிர 25 மாவட்டங்களில் உள்ளூர் பஸ்கள் இயக்குவதற்கும் வேறு சில தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும், 50 நாட்களுக்கு மேலாக இயங்காத அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று முதல் செயல்படும் என்றும் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் வரவழைக்கப்பட வேண்டும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:நீண்ட நாள்கள் வேலை செய்யப்படாததால், இனிமேல் சனிக்கிழமை உள்பட 6 நாட்களும் பணி நாட்களாகும். அதேசமயம், வழக்கமான பணி நேரத்தைப் பின்பற்றி அலுவலகங்கள் இயங்க வேண்டும். ஊழியர்கள் 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, திங்கள் செவ்வாய்க் கிழமைகளில் முதல் பிரிவினர் பணியாற்றுவார்கள். புதன், வியாழக் கிழமையில் இரண்டாம் பிரிவினரும், வெள்ளி, சனிக்கிழமைகளில் முதல் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

அடுத்த வாரத்தில் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் இரண்டாம் பிரிவினரும், புதன், வியாழக்கிழமைகளில் முதலாம் பிரிவினரும், வெள்ளி சனிக்கிழமைகளில் இரண்டாம் பிரிவினரும் பணியாற்ற வேண்டும். அதே சமயம், தேவைப்படும் ஊழியர்கள் எப்போது வேலைக்கு அழைத்தாலும் அலுவலகத்துக்கு வர வேண்டும். குரூப் ஏ பிரிவில் வரும் அதிகாரிகள், அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வரவேண்டும்.அதே சமயம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம், அரசுக் கருவூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி செயல்படும். ஊழியர்களுக்கு அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று சென்னை தலைமைச் செயலகம், எழிழகம், டி.பி.ஐ வளாகங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின. எனினும், வழக்கமான ஊழியர் கூட்டங்களைக் காண முடியவில்லை. குறைந்த அளவு ஊழியர்களே தென்பட்டனர். விடுமுறை நாட்களில் அலுவலகங்கள் இயங்குவது போல் காணப்பட்டது.

More News >>