தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 11,760 ஆக உயர்வு.. பலி 81 ஆக அதிகரிப்பு..
தமிழகத்தில் இது வரை 11,760 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் 7117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழக அரசு நேற்று(மே18) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று மட்டும் புதிதாக 536 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிராவிலிருந்து வந்த 46 பேரும் அடங்குவர். தற்போது மாநிலம் முழுவதும் 11,760 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 234 பேரையும் சேர்த்து மொத்தம் 4406 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 2 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி 81 ஆக உயர்ந்தது. நேற்று 10,887 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 3 லட்சத்து 22,508 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 7117 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர அரியலூரில் 2, செங்கல்பட்டில் 43, காஞ்சிபுரத்தில் 17, கன்னியாகுமரி 7, கள்ளக்குறிச்சியில் 5, மதுரையில் 3 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது, அரியலூரில் மொத்தம் 355 பேருக்கும், செங்கல்பட்டு 537, கோவை 146, கடலூர் 418, காஞ்சிபுரம் 203, மதுரை 169, பெரம்பலூரில் 139 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் மூலமும், அடுத்ததாக கோயம்பேடு மார்க்கெட் மூலமும் கொரோனா பரவியிருந்தது. தற்போது அவை கட்டுப்பட்டு விட்டாலும், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது.