கொரோனா ஊரடங்கு.. கிராமங்களில் மட்டும் சலூன்கள் திறப்பு..

தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் இன்று முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது இன்னும் முழுமையாகக் கட்டுப்படவில்லை. இது வரை 11,760 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதனால், ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று குறைய, குறையத் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரக பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்கள் 19ம் தேதி (இன்று) முதல் திறக்கப்படலாம் என உத்தரவிட்டுள்ளேன்.

முடிதிருத்தும் நிலையங்களில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கையுறை அணிந்து முடி வெட்டுவதுடன், அனைவரும் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடையில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினியைத் தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இதன்படி, இன்று கிராமப்புறங்களில் உள்ள முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டன. மார்ச் 24 முதல் 55 நாட்களாக சலூன்கள் மூடப்பட்டிருந்ததால், நிறையக் கூட்டம் காணப்பட்டது. சில பகுதிகளில் நீண்ட வரிசையில் சிறுவர்களும், பெரியவர்களும் காத்திருந்து முடிவெட்டிக் கொண்டனர்.

More News >>