கொரோனா பாதிப்பு.. 64 நாளில் ஒரு லட்சம் தொட்டது இந்தியா.. பரவும் வேகம் குறைவுதான்..

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 64 நாட்களில் 100ல் இருந்து ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் கொரோனா பரவிக் கொண்டுதான் இருக்கிறது. தினமும் புதிதாக 3, 4 ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

இன்று(மே 19) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 1139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 39,173 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 3163 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி, கேரளாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின், 100 பேருக்குப் பரவிய நாளிலிருந்து 64 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு இந்நோய் பரவியிருக்கிறது. அதே சமயம், அமெரிக்காவில் 25 நாட்களிலும், இத்தாலியில் 36 நாட்களிலும், இங்கிலாந்தில் 42 நாட்களிலும், பிரான்சில் 39 நாட்களிலும், ஜெர்மனியில் 43 நாட்களிலும், ஸ்பெயினில் 30 நாட்களிலும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா போன்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைவாகவே உள்ளது.

அதே போல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் விகிதமும் இந்தியாவில் 3 சதவீத அளவாகவே உள்ளது. அதே சமயம், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 சதவீதமாக உள்ளது.

More News >>