நிதித் திட்டம் தெரியுமா? ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம்! நம்மால் முடியும் பாகம்-1
நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். நல்ல படிப்பு, நல்ல வேலை, சம்பளம், அதன் பிறகு நமக்கு வசதியாக ஒரு வீடு, கார், அவ்வப்போது குடும்பத்துடன் ஒரு ஹாலிடே எனப் பெரிய பட்டியலே வைத்திருப்போம்.
ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பமும் இந்தக் கனவைக் காணாமல் இருந்திருக்காது. இந்தக் கனவை நினைவாக்குவதற்கான முதல் வழி, நிதித்திட்டம். நம் குடும்ப நிதியை திட்டமிட்டு செலவு செய்து சேமிப்பதன் மூலம் நமது சேமிக்கும் திறன் அதிகரித்து நமது கனவை நினைவாக்குவதற்கான காலம் விரைவில் அமையும்.
‘திட்டமிடத் தவறினால், நீங்கள் தோற்கத் தயாராகுகிறீர்கள்’ என்று சொல்வார்கள். உண்மை. உங்கள் நிதி நிலைகளைப் பொறுப்புடன் நீங்கள் திட்டமிடுவதற்கான வழிகளைக் கீழே காணலாம்.
நிலை 1: பொருளாதார ரீதியாக எங்கு நிற்கிறீர்கள்?
இதுதான் நிதித்திட்ட மேலாண்மையின் அடிப்படை நிலை. ஒவ்வொரு மாதமும் உங்கள் குடும்பத்தின் வருமானம் என்ன, செலவு எவ்வளவு, சேமிப்பு எவ்வளவு என்பது குறித்தத் தெளிவு முதலில் இருக்க வேண்டும். நிதி மேலாண்மை என்பது பெரிய கம்ப சூத்திரம் கிடையாது. சாதாரணமாக ஒரு பேப்பர், பேனா எடுத்துக்கொண்டு வரவு, செலவு எனப் பிரித்து எழுதுங்கள். இதிலிருந்து நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது உங்களுக்கேத் தெரியும்.
நிலை 2: குறி வையுங்கள்
நம்மில் பலர் பணக்காரர்களால் மட்டுமே பணம் அதிகம் சம்பாதித்து அதிகமாக சேமித்து கடைசிக் காலம் வரையில் நிம்மதியாக உட்கார்ந்துகொண்டு சாப்பிட முடியும் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், நிதித் திட்டம் மூலம் நாம் நமக்காகவே ஒரு குறிக்கோளை முன்வைத்து நாம் சம்பாதிக்கும் சிறு தொகையிலும் கணக்கு எழுதி செலவு செய்து சேமித்தால், பொருளாதார ரீதியான எந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும்.
நிலை 3: உங்களுக்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்!
நல்ல நிதி மேலாண்மை என்பது உங்கள் மாத வருமானத்திலுருந்து ஒவ்வொரு மாதமும் 10 சதவிகிதம் ஆவது நீங்கள் சேமிக்க வேண்டும். இந்த சேமிப்பை உங்களுக்கான வீட்டு சம்பளமாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். சம்பளம் வந்ததும் முதல் வேளையாக அதிலிருந்து 10 சதவிகிதத்தை சேமிப்புக்காக ஒதுக்கி வைத்துவிடுங்கள். இது மாதக் கடைசியில் நீங்கள் சேமிப்புக்காக மீதமிருப்பதை எடுக்கலாம் என நினைத்தால் பணம் கையைக் கடிக்கும். இந்த ஒவ்வொரு மாத சேமிப்பும் உங்களுக்குப் பெரிய அளவில் உதவும்.
நிலை 4: விரலுக்கேற்ற வீக்கம்
உங்கள் வருமானத்துக்குத் தகுந்த வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் வரவுக்கு மீறி செலவு இருக்கவே கூடாது. கிரெடி கார்டு போன்ற வசதி எல்லாம் இருமுனை கத்தி போல. ஒரு பக்கம் அதிகளவு வசதிகள் மூலம் உங்கள் செலவுகளைத் தூண்டி உங்கள் பர்ஸை பதம் பார்க்கும். பின்னர் கடன் வட்டி மேல் வட்டி போட்டி உங்கள் வாழ்க்கையையே பதம் பார்த்துவிடும். அதனால், ஒவ்வொரு மாதமும் உங்களால் செலவு செய்த பணத்தைத் திரும்ப செலுத்த முடியும் என்றால் மட்டுமே கிரெடிட் கார்டு வைத்துக்கொள்ளுங்கள்.
நிலை 5: கடனிலிருந்து விடுபடுங்கள்!
சேமிப்புக் கணக்கிலிருந்து வட்டி சம்பாதிக்கலாம் என நினைக்கும் நாம், கிரெடிட் கார்டு மூலம் கடனாளி ஆக உருவாகி கூட்டி வட்டி செலுத்தும் நிலையில் இருக்கக்கூடாது. அதற்காகத்தான் முதலில் உங்கள் குடும்ப பட்ஜெட் குறித்து நீங்கள் முதலில் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். கடன் இல்லாமல் இருந்தாலே போதும். உங்கள் பணம் உங்களுடையதாக மட்டுமே இருக்கும்.
நிலை 6: பட்ஜெட் போடுங்கள்
பலர் பட்ஜெட் போட்டு வாழ்வது மிகப்பெரிய கட்டுப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால், ஒரு வகையில் பட்ஜெட் போட்டு வாழ்வது என்பது நிதிச்சுமையிலிருந்து உங்களை விடுவிக்கும். பட்ஜெட் என்பது உங்கள் பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதை உங்களுக்குக் கற்றுத்தரும். இதன் மூலம் நீங்கள் எப்படியெல்லாம் உங்கள் செலவுகளைக் குறைத்து உங்கள் வருமானத்தைப் பெருக்க முடியும் என்பதைக் கற்றுத்தரும்.
நிலை 7: சேமிப்பை முதலீடு ஆக்குங்கள்
நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் உங்களுக்கு உதவ வேண்டும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். தொழில் தொடங்குங்கள், வருமானத்தை முதலீடு செய்யுங்கள். வங்கித்திட்டங்களில் ஷேர் மார்கெட்டில் என உங்களுக்கு எது தெரியுமோ அதில் முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்யும் திட்டம் குறித்து நன்கு தெரிந்தகொண்ட பின்னரே முதலீடு செய்யுங்கள்.உங்கள் பணம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும். வருமானத்தை அளவாக செலவழித்து சரியாகச் சேமித்து மிகச்சரியாக முதலீடு செய்யும் போதும் உங்கள் வருமாணத்துடன் உங்கள் மகிழ்ச்சியும் பெருகும்.
தொடரும்... -முனைவர் கோகுல் ஜெயபால்
**************************************************************************** கோகுல் ஜெயபால் ஒரு கனடாவாழ் இந்தியர் ஆவார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் டொரன்டோ நகரில் வசித்து வருகிறார். உயிரியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கோகுல், பயிற்சியாளர், எழுத்தாளர், மனித நேய ஆர்வலர், முதலீட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். தனது விடாமுயற்சி மற்றும் சரியான திட்டமிட்ட முதலீடுகள் மூலம் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்துள்ளார். தான் விரும்பும் பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.