ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டிகள் இல்லாத 200 ரயில்கள் ஓடும்..

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல், 200 ரயில்கள் விடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று முதல் நாடு முழுவதும் ரயில்கள் ஓடவில்லை. இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதி கிடைக்காமல், 1000 கி.மீ. தூரம் வரை நடக்க ஆரம்பித்தனர். இதில் ஏராளமானோர் விபத்துகளில் சிக்கியும், நோய்வாய்ப்பட்டும் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 15 சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது. ஆனால், இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதுமானதாக இல்லை.இதற்கிடையே ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இதனால், ஜூன் 30ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படாது என்று கருதப்பட்டது.இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்றும் இதற்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து ரயில்களும் படிப்படியாக விடப்படும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கிற்கு முன்பு, நாடு முழுவதும் சராசரியாக 12 ஆயிரம் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>